நடக்க நடக்க விரியும் பாதை... இருபுறமும் செழித்து தழைக்கும் மரங்கள்...
மரங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள்.. பழங்கள்.. மரங்களில்
எட்டிப்பார்த்து கீச்சிடும் பறவைகள்... கொஞ்சும் மாலை வெயில்... மென்நடை...
இத்தனை இனிமையாக ஒரு நடைபயணம் இருக்க முடியுமா? எங்கோ ஒரு கிராமத்தில்
இந்த காட்சிகள் கை கூடக்கூடும்....ஆனால்... அன்பாலும்... காதலாலும் பொங்கி
பெருகும் ஒவ்வொரு மனிதருக்குள்ளும்... மனதிற்குள்ளும் கவித்துவமாக ஒரு
காட்சி விரியும் என்றால் அதில் மரங்களுக்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு..

இளநிலை படித்த கல்லூரியில் நிறைய பெரிய மரங்கள்... வயதான மரங்கள்
இருந்தன.. இன்னமும் இருக்கின்றன. அவற்றை இரு கைகளால் கண்டிப்பாக பிடிக்க
முடியாது.. அத்தனை பெரிது... பெயர் தெரியா மரங்கள்... புங்கை... கொன்றை..
சரக்கொன்றை... எத்தனை எத்தனையோ மரங்கள்..
முதுநிலை இதழியல் படித்த கல்லூரியிலோ பெரிய வனமே
ஒளிந்திருந்தது..மரங்களின் கூட்டத்திற்கிடையேதான் வகுப்புக்கான நடை பயணம்..
நடக்க நடக்க இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கும்..பசுமை படர்ந்து கொண்டே
இருக்கும்.. அங்கு பல மூலை முடுக்குகளை நான் பார்த்ததே இல்லை... அது ஒரு
முடிவில்லா மர்ம முடிச்சாக நீண்டு கொண்டே இருக்கும் வனம்.. அங்கு இல்லாத
மரங்களே இல்லை... மனிதர்களை விட மரங்கள் மிஞ்சிய வனம் அது.. அந்த சூழல்
சென்னை கிறித்தவக் கல்லூரிக்கு மட்டுமே சாத்தியமான மிக அழகான சூழல்..
சென்னையை ஒட்டிய தாம்பரத்தில் அப்படி ஒரு வனமும்.. அதற்குள் ஒரு
கல்லூரியும் இருக்க முடியுமா என்ற ஆச்சரியம் இருந்தது. ...
எந்த இடத்தில் மரங்களை பார்த்தாலும் ஒரு வணக்கம் மனதிற்குள் எழுகிறது..
ஒவ்வொரு மரமும் எத்தனையோ ஆயிரம் பேரை.. லட்சம் பேரை பார்த்துவிட்டன. இருந்த
இடத்தில் இருந்து நகராமல் வானுக்கும் மண்ணுக்கும் ஒரு மறைமுக பாதையாக
இருக்கும் மரங்கள் மழையை பெய்ய வைப்பதிலும்.. ஆரோக்கியமான சுற்றுச்சூழலை
தருவதிலும் பெரும் பங்காற்றுகின்றன.
அப்படிப்பட்ட மரங்களில் கிட்டதட்ட ஆயிரம் மரங்கள் அண்மையில் சென்னையில்
மரணித்தன. நீலம் புயல் ஆயிரம் மரங்களை வேரறுத்து வீசிவிட்டது. பெரிய
பாதிப்பில்லை என்றுபேசப்பட்ட அந்த புயல், ஆயிரம் மரங்களை சாய்த்துவிட்டன.
ஆனால் அவற்றால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை பற்றித்தான் பேசினோம்...
மரங்களின் மரணம் பற்றி யாரும் பேசவில்லை.. இத்தனை மரங்களின் இழப்பால்
இயற்கை சூழலுக்கு ஏற்பட்ட வெறுமை பற்றி பேசவேயில்லை...
இதுமட்டும்தானா? தானே புயல் வேரறுத்த மரங்கள் பல்லாயிரம்.. சென்னை
மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்டப்பட்ட மரங்கள் நூற்றுக்கணக்கில்...
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் யாரோ விஷமிகள் வைத்த தீயில் பற்றி
எரிந்தது பல்லாயிரம் மரங்கள்.. அதில் எத்தனை எத்தனையோ மூலிகை மரங்கள்..
வயதான மரங்கள்..பச்சை குருத்துக்கள்.. கண்ணுக்கு தெரிந்து இத்தனை
இழப்புகள்... அவற்றை எப்படி ஈடுகட்டினோம்.? எத்தனை மரங்கள் புதிதாக
நடப்பட்டன.? விடை மிக மிகச் சொற்பம்தான்
மரங்கள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள்... வெறுமை என்ற
ஒற்றைச்சொல்தான் எழும்பும். மரங்கள் இல்லாவிட்டால் சுத்தமான காற்று
கிடையாது.. வீடுகள் முழுமையடையாது... காகிதங்கள் கிடையாது.. நாற்காலிகள்
கிடையாது.. மரச்சாமான்கள் இல்லை... நேரடியாகவோ, மறைமுகமாகவோ மரங்கள் நம்
வாழ்க்கையில் பின்னிப்பிணைந்திருக்கின்றன.. ஆனால் அவற்றை நாம் பொருட்டாக
மதிப்பதில்லை.. ஒரு மரம் மரித்தால்.. பின்னொரு மரம் அதே அளவில் செழித்து
வளர எத்தனை ஆண்டுகாலம் பிடிக்கும்? அதுவரை அந்த மரம் இயற்கைக்கு அளித்த
பங்களிப்பை யார் ஈடு செய்வது?
தொழிற்சாலைகளுக்காகவும்.. வீடுகளுக்காகவும் வெட்டப்படும் மரங்கள் ஈடு
செய்யப்படுவதில்லை.. மண் சுவாசிக்க மரம் வேண்டும்.. பூமி குளிர மண்
வேண்டும்.. மாசு இல்லாத பூமிக்கு மரம் வேண்டும்... மழை கிடைக்கவும்
மரம்தான் வேண்டும்..
ஒரு செடி வளர்த்து பாருங்கள்.. முளைவிடும் நேரம் தொடங்கி முதல் தளிர்
துளிர்க்கும் வரை ஒவ்வொரு தருணமும் நமக்கு அளிக்கும் மகிழ்ச்சியை அளவிடவே
முடியாது.. நாம் நட்ட செடியில் பூக்கும் முதல் பூ தரும் நெகிழ்ச்சி
பிரசவித்த குழந்தையின் முகம் பார்க்கும் மகிழ்ச்சிக்கு ஈடாக சொல்லலாமா?
அந்த மகிழ்ச்சியை இனியாவது கொண்டாடுவோம்.. அனுபவிப்போம்..